Dec 25, 2025 - 07:08 AM -
0
2026ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் நமது நாட்டு மக்கள் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் வேதனையை அனுபவித்தனர். இவ்வாறான அழிவுகளுக்கு மத்தியிலும், நத்தார் பண்டிகை என்பது நம்பிக்கையின் பிறப்பைக் குறிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். "இருளான இரவுகளுக்கு மத்தியிலும் ஒரு ஒளி பிறக்கிறது; அதுவே நம்பிக்கையின் ஒளி," என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரழிவின் போது இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி இலங்கையர்கள் காட்டிய ஒற்றுமையே தேசத்தின் உண்மையான வலிமை எனக் குறிப்பிட்ட அவர், அந்த மனிதாபிமானத்தின் ஊடாக நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய சூழலில் நாட்டுக்குத் தேவைப்படுவது பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் அல்ல எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, மக்களின் வேதனைக்கு மருந்தாகும், நீதியான மற்றும் கருணை நிறைந்த ஒரு நாட்டை உருவாக்குவதே காலத்தின் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
"அனர்த்தங்களின் போது மக்களைத் தனிமைப்படுத்தாத, உதவியற்றவர்களைப் பாதுகாக்கும் ஓர் அரசை உருவாக்குவது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். இழந்தவற்றை விடவும், நம்மிடம் எஞ்சியுள்ள மனிதாபிமானமும், நாளைய நாள் பற்றிய விசுவாசமுமே நம்மை வலிமைப்படுத்தும்," என அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, இலங்கை வாழ் கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் புதிய நம்பிக்கை நிறைந்த நத்தார் பண்டிகையாக இது அமைய வேண்டும் என அவர் மனதார வாழ்த்தியுள்ளார்.

