செய்திகள்
போதைப்பொருள் படகுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு தடுப்புக்காவல்!

Dec 25, 2025 - 08:27 AM -

0

போதைப்பொருள் படகுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு தடுப்புக்காவல்!

தென் கடல் பிராந்தியத்தில் இலங்கை கடற்படையினரால் மீன்பிடிப் படகொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைப் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னரே இந்தத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 20ஆம் திகதி தென் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகொன்றைக் கடற்படையினர் சோதனையிட்டபோது, அதில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, குறித்த மீன்பிடிப் படகையும் அதிலிருந்த 5 சந்தேக நபர்களையும் நேற்று (24) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகள், அங்கு வைத்து சோதனையிட்டனர். இதன்போது 21 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. 

ஈரானுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றிலிருந்து நடுக்கடலில் வைத்து இந்த மீன்பிடிப் படகிற்குப் போதைப்பொருள் மாற்றப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில், போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர ஒத்துழைப்பு வழங்கிய மேலும் 6 சந்தேக நபர்கள் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (24) வரையான காலப்பகுதியில் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 99 படகுகள் மற்றும் பலநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 360 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று வரை, கடற்படை 4,000 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினை பறிமுதல் செய்துள்ளது.

 

அவற்றில், 2,982 கிலோகிராம் 600 கிராம் ஐஸ் மற்றும் 1,050 கிலோகிராம் 100 கிராம் ஹெரோயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

 

மேலதிகமாக, 33 கிலோகிராம் ஹஷிஷ், 1,683,722 போதைப்பொருள் மற்றும் 5,900 கிலோகிராம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 
 

 

 

Comments
0

MOST READ