Dec 25, 2025 - 01:30 PM -
0
பாவ இருளில் இருந்து மானிட சமுதாயத்தை மீட்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பூவுலகில் இயேசு தோன்றிய இந்நன்னாளில் இயேசுவின் தியாக வாழ்க்கையை மனதில் கொண்டு நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
'விண்ணுலக தேவன் மண்ணுலகில் ஏழை மனிதனாய் அவதரித்த நந்நாளே நத்தார் பெருநாள். பாவ இருளில் இருந்து மானிட சமுதாயத்தை மீட்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இப் பூவுலகில் தோன்றிய ஒளிவிளக்கே இயேசு கிறிஸ்து.
இயேசுவின் பிறப்பு வெறுமனே ஒரு நிகழ்வல்ல. அது மனித சமுதாயத்தின் தவறான பாதையை மாற்றி அமைத்த அற்புதமான வரலாறு.
இயேசுவின் ஏழ்மையான பிறப்பே உலகின் ஒரு எடுத்துக்காட்டு. அவரின் முப்பத்தி மூன்று வருட இவ்வுலக வாழ்க்கையில் முப்பது வருடங்கள் பெற்றோருக்கு கீழ்படிவுள்ள வாழ்க்கையானது, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. மிகுதி மூன்று வருட வெளியுலக வாழ்க்கை உலக மீட்சிக்கான வழிகாட்டி.
அன்பு ,கருணை, கீழ்ப்படிவு, நேர்மை, பக்தி, முயற்சி, உண்மை, ஒழுக்கம் என உலகிற்கு ஒளியால் வாழ்ந்து ஈற்றில் தன்னையே பலியாக சிலுவையில் மரணித்த தியாகம் நிறைந்த வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு ஒரு புதிய பாதைக்கு அடித்தளமிட்டது.
இறுதி மூன்று ஆண்டுகள் மனித சமுதாயத்தை பாவத்திலிருந்து விடுதலையளிக்க அவர் ஆற்றிய உரைகள், அவரின் போதனைகள் இன்றளவும் உலகெங்கும் எதிரொலிக்கின்றன. எனவே இத்தகைய சிறப்பு மிக்க பெருநாளில் இலங்கை மற்றும் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களை வாழ்த்துவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.

