Dec 25, 2025 - 02:03 PM -
0
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் மக்களுக்குக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்திற்கு பிரதியமைச்சரும் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் நேற்று (24) மாலை விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இதுவரை மக்களிடம் கைளிக்கப்படாமல் காடாகக் காட்சியளிக்கும் நிலைமை குறித்து நாமும், அரசாங்கமும் கவலையடைகின்றோம். அந்த வகையில்தான் இவ்வீட்டுத்திட்டம் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன் நிமித்தமே முதல் கட்டமாக அமைச்சர் உட்பட நாம் இங்கு வந்துள்ளோம். இங்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு சவூதி அரசாங்கமும் எங்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இங்கு விஜயம் செய்த பிரதியமைச்சரும் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இப்திகார் பானு, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி.எம்.எம்.அன்சார் உட்பட அரசாங்க அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் மிக விரைவில் இதனை மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை எல்லோரும் இணைந்து எடுப்பதெனவும் தீர்மானித்தனர்.
இங்கு வீடுகள், சந்தைக் கட்டிடம், பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம், பாதைகள் போன்ற அனைத்து வசதிகள் இருந்தும் கடந்தகாலம் ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் இவ்வீடுகளை கையளிக்காமல் மரங்களாலும் புற்களாலும் சூழப்பட்ட வனமாக தற்போது காட்சி அளிக்கின்றது.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இவ்வீடமைப்புத்திட்டம் சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டபோதிலும், நிதிமன்றத் தீர்ப்பு மற்றும் அரசியல் காரணங்களினால் மக்களுக்கு வழங்கப்படாமல் தொடச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
--

