Dec 25, 2025 - 02:23 PM -
0
இம்முறை "தேசிய பாதுகாப்பு தின" பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை (26) காலி, "பெராலிய சுனாமி நினைவுத் தூபி" முன்னிலையில் காலை 8.30 மணி முதல் காலை 11.00 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"தேசிய பாதுகாப்பு தினத்தை" முன்னிட்டு, சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நாளை நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவினால் எமது நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.
அத்துடன் பில்லியன் கணக்கான பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்தன.
அதற்கமைய, 2005 ஆம் ஆண்டின் 15/1975/715/001-1 இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைவாக, 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி "தேசிய பாதுகாப்பு தினமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுனாமி அனர்த்தம் மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் நாட்டில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், 2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஒரு தேசிய நிகழ்வாக, அரசியல் தலைமைகளின் பங்கேற்புடன் தேசிய பாதுகாப்பு தின நினைவுகூரல் நிகழ்வு மக்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது.

