Dec 25, 2025 - 04:08 PM -
0
வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரமுனை கிராமத்தின் முக்கியஸ்தர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் நேற்று (24) நடைபெற்றது.
இச் சந்திப்பின்போது, காரமுனை பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில்,
யுத்தத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும், இதுவரை எமக்கு எந்தவிதமான காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படாமல் இருப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாக உள்ளது.
வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள ஏனைய பிரதேச மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், காரமுனை பிரதேசத்திற்கு மட்டும் இதுவரை எந்தவித அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படாதது அநீதியான செயலாகும்.
இந்நிலையில், காரமுனை மக்களை அச்சுறுத்தி, அவர்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனை கவனமாகக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், உடனடியாக சம்பந்தப்பட்ட சில முக்கிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விடயங்களை விசாரித்தார். மேலும், எதிர்காலத்தில் காரமுனை மக்களுக்கு உரிய காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக வழங்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இச்சந்திப்பில், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ். தாஹிர், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

