Dec 26, 2025 - 02:59 PM -
0
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டார்.
வேறு ஒருவரால் திருடப்பட்ட தங்க நகைகளை முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்துள்ளதாகவும், அந்த திருட்டுப் பொருட்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமலிருக்கவும் 300,000 ரூபா பணமும் முக்கால் பவுன் தங்கமும் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.
இதில் 250,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற போதே சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்தது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரரின் மகள் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், மற்றைய பிள்ளை பெப்ரவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த சந்தேகநபர் தொடர்பான பிணை கோரிக்கையை எதிர்வரும் தினத்தில் உரிய பிரதான நீதவான் நீதிமன்றில் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு வருஷவிதான, சந்தேகநபரை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

