Dec 26, 2025 - 03:05 PM -
0
இலங்கையின் பேரழிவாக வர்ணிக்கப்படும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ள இன்று (26) உடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளன.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
சுனாமி பேரனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பிரதேசம் பாரிய அழிவினை எதிர்கொண்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்த நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து சொத்துகளை இழந்து நிர்க்கதியானார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகளையும் சொத்துகள் இழப்புகளையும் எதிர்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் டச்பார், திருச்செந்தூர், நாவலடி மற்றும் புதுமுகத்துவாரம் ஆகியவற்றில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
சுனாமி அனர்த்தம் காரணமாக டச்பாரில் 80 பேரும், திருச்செந்தூர் பகுதியில் 243 பேரும், புதுமுகத்துவாரம் பகுதியில் 211பேரும், நாவலடி பகுதியில் 544 பேரும், உயிரிழந்திருந்த சோக நாளை இன்று காலை உணர்வுபூர்வமாக மதவழிபாட்டுகளுடன் நினைவுகூர்ந்தனர்.
டச்பாரில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை டச்பாரில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
டச்பாரில் 80 பேரின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவுத்தூபியில் கிறிஸ்தவ வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
திருச்செந்தூரில் உள்ள நினைவுத்தூபியில் கிறிஸ்த வழிபாடுகளுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மக்கள் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று புதுமுகத்துவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் 211 பேரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இந்துசமய வழிபாடுகளுடன் அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள 544 பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் விசேட இந்து மதவழிபாகள் நடைபெற்று இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கடலில் பிண்டம் கரைக்கப்பட்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதை காணமுடிந்தது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், கந்தசாமி பிரபு, பிரதி முதல்வர் தினேஸ்குமார், முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இ.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
--

