Dec 26, 2025 - 04:15 PM -
0
சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் இடம்பெற்ற இந்த ஆண்டின் இறுதியில், அரசியல் துறையில் நிலவும் கடும் அமைதி அரசியல் ஆய்வாளர்களின் கடும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலின் பின்னர் அரசியல்வாதிகள் பலர் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
புயலின் தாக்கத்தின் பின்னர் தேசிய மட்ட அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதும் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புயலின் தாக்கத்திற்கு உள்ளாகாத பிரதேசங்களின் அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளில் இணைந்து வருவதுடன், இந்த நிலைமையில் தேசிய அரசியல் அமைதியாக பயணிக்கும் தன்மையைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டின் இறுதியில் சில அரசியல்வாதிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போதிலும், இவ்வருடம் அவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மலரும் 2026 ஆம் ஆண்டு தேசிய அரசியலுக்கும் பிரதேச அரசியலுக்கும் ஒரு முக்கியமான ஆண்டாக அமையும்.
'டிட்வா' புயலின் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்காக அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியேற்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.
அத்துடன் திசைகாட்டிக்கு அதிகாரம் உள்ள நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளில் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த சபைகளின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பிரதேச அரசியல்வாதிகள் பெரும் அர்ப்பணிப்பை செய்ய வேண்டியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது அதனை நடத்துவது குறித்தும் நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளது.
தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு சவாலாக அமையும் வகையில் செயற்படுவது 2026 ஆம் ஆண்டில் நிகழும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

