Dec 26, 2025 - 08:08 PM -
0
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 5,000க்கும் அதிகமான வீடுகள் அதிக அபாய வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அந்த மக்களுக்காக பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் வாரத்தில் இந்தத் தரவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும், ஆய்வுகளின் முடிவுகளுக்கு அமைய இந்தத் தரவுகள் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
'டித்வா' புயல் காரணமாக நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பாரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதன்படி கண்டி மாவட்டத்தில் 363 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 162 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 219 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன.
இதேபோல், குருநாகல் மாவட்டத்தில் 89 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், கேகாலை மாவட்டத்தில் 79 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், பதுளை மாவட்டத்தில் 312 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலப்பகுதிகளில் வசித்த மக்கள் தற்போது வீடுகளை இழந்து பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மக்கள் வசித்த இடங்களை ஆய்வு செய்ய 50 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்டிக்கு 15 குழுக்கள், பதுளைக்கு 5 குழுக்கள், கேகாலைக்கு 10 குழுக்கள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நிலச்சரிவு ஆய்வுகளின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஆசிறி கருணாவர்த்தன, பாதிக்கப்பட்ட மக்கள் அதிக அபாயகரமான, நடுத்தர மற்றும் குறைந்த அபாயகரமான பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதில் அதிக அபாய வலயம் மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மூன்று பிரிவுகளிலும் உள்ள மக்களை அவ்விடங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிலச்சரிவினால் வீடுகளை இழந்தவர்கள், வீடுகள் எஞ்சியிருந்தும் வசிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் மற்றும் வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதும் எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அடையாளம் காணப்பட்டவர்கள் என அனைவரும் அதிக அபாய வலயத்திற்குள் உள்ளடங்குவர்.
இவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோருக்காக பாதுகாப்பான நிலப்பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 20 இடங்களுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிறி கருணாவர்த்தன தெரிவித்தார்.
இந்த ஆய்வுகள் சிறிது நேரம் ஆகலாம் என்றும், அனைத்து கோரிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு துல்லியமான மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

