Dec 27, 2025 - 07:16 PM -
0
எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு, கடற்படை வீரர்கள், விமானங்கள் மற்றும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையை காட்டிலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி, அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட,
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பின்படி, கிழக்குப் பகுதியில் நிலவும் அலை வடிவான காற்று காரணமாக இந்த மாதம் 29ஆம் திகதி முதல் வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கான அவசர காலத் திட்டத்தின் கீழ் படையினர், விமானங்கள், கடற்படைப் பிரிவுகள் மற்றும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொள்கிறது எனத் தெரிவித்தார்.

