Dec 27, 2025 - 08:12 PM -
0
அம்பலாங்கொடை வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டில் தங்கியிருந்து இக்கொலையைத் திட்டமிட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வீடு கண்டி, அன்கும்பர பகுதியில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் குழுவினர் அந்த வீட்டிற்குச் சென்றபோது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொட நகரில் உள்ள விற்பனை நிலையமொன்றின் முகாமையாளர் வர்த்தக நிலையத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அண்மையில் கிரிபத்கொட மற்றும் மாகொல பகுதிகளில் இருவரைக் கைது செய்தனர்.
துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளைச் ஏற்படுத்திக் கொடுத்தமை மற்றும் அவர்களை ஒருங்கிணைத்தமை போன்ற செயற்பாடுகளை தாமே மேற்கொண்டதாக அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டில் மறைந்திருக்கும் 'கரந்தெனிய சுத்தா' என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய விசாரணையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கொலைக்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கிய பெண்ணும் அடங்குவார்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஆகியவற்றுடன் அவர் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் கண்டியில் உள்ள குறித்த சொகுசு வீட்டில் கடந்த 7ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொடவிற்குச் சென்று குற்றத்தைச் செய்துவிட்டு, மீண்டும் இருவரும் அதே சொகுசு வீட்டிற்கே தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் அந்த வீட்டைச் சோதனை செய்தபோது அவர்கள் அங்கிருந்து ஏற்கனவே தப்பிச் சென்றிருந்தனர்.
இக்கொலையை கொஸ்கொட சுஜீ, கொத அசங்க, கரந்தெனிய சுத்தா, அவரது தம்பியான கரந்தெனிய ராஜு, தொல மற்றும் தசுன் மானவடு ஆகிய பாதாள உலகக் குற்றவாளிகள் அனைவரும் இணைந்து செய்துள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
கொலையுண்ட கோசல என்பவர், கொஸ்கொட சுஜீயின் பிரதான எதிரியான 'ஊரகஹ மைக்கல்' என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதே இக்கொலைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

