Dec 28, 2025 - 04:29 PM -
0
நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில், கடந்த ஒரு நாளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 840 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 378 கிராம் ஹெரோயின், 417 கிராம் ஐஸ் மற்றும் ஹஷீஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 11 பேரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 6 சந்தேக நபர்களை புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொலிஸாரினால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 22 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 28,879 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபோதையில் மற்றும் அஜாக்கிரதையாக வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

