Dec 29, 2025 - 10:11 AM -
0
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.
சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன யுவதி போருதோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யுவதி தான் காதலித்த இளைஞனை தொலைபேசி ஊடாக அந்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அந்த இளைஞன் தனது நண்பர் ஒருவருடன் நைனாமடை பாலத்திற்கு அருகில் வந்தபோது, யுவதி ஆற்றில் குதித்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யுவதியைக் காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனும் ஆற்றில் குதித்துள்ளார்.
எனினும், அங்கிருந்தவர்கள் இளைஞனைப் பத்திரமாக மீட்ட போதிலும், யுவதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று (28) மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளையடி கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.
மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆலியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

