Dec 29, 2025 - 11:04 AM -
0
துபாய் மற்றும் ஓமானைத் தளமாக கொண்ட புகழ்பெற்ற லொஜிஸ்டிக் (Logistics) நிறுவனமான Navire Logistics Services L.L.C நிறுவனத்தின் 50% உரிமையைக் கையகப்படுத்தியதன் மூலம் டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) தனது சர்வதேச இருப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, இலங்கைக்கு அப்பால் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், சர்வதேச சந்தைகளில் தன்னை நிலைநிறுத்துவதற்கும் குழுமம் எடுத்துள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இலங்கையில், இக்குழுமத்தின் லொஜிஸ்டிக் பிரிவான D P Logistics (Private) Limited (DPL) நிறுவனமானது, களஞ்சிய வசதி, போக்குவரத்து, சரக்கு அனுப்புதல், திட்ட லொஜிஸ்டிக், உள்நாட்டு விநியோகம், சுங்க முகவர் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக ஏற்கனவே தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
களஞ்சிய வசதி மற்றும் 3PL (மூன்றாம் தரப்பு லொஜிஸ்டிக்) செயற்பாடுகளின் அடிப்படையில் DPL நிறுவனம் இலங்கையில் தற்போது முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதுடன், நாட்டில் உள்ள லொஜிஸ்டிக் நிறுவனங்களில் மிகப்பெரிய கொள்கலன் தொகுதிகளில் ஒன்றையும் நிறுவனம் கொண்டுள்ளது. முன்னெடுத்த போதிலும், தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் சந்தைப் பங்குகளை கொள்வனவு செய்வதன் மூலம், அனைத்து லொஜிஸ்டிக் துறைகளிலும் நிபுணத்துவம் கொண்ட முக்கிய உள்நாட்டு நிறுவனங்களில் ஒன்று எனும் அதன் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது. டேவிட் பீரிஸ் குழுமம் 2022 ஆம் ஆண்டில், தனது Logistics & Shipping Cluster சேவையினை கப்பல் முகவர், பராமரிப்பு சேவைகள், கடல்சார் லொஜிஸ்டிக்ஸ் ஆக விரிவுபடுத்துவதற்காக, Expolanka Holdings PLC நிறுவனத்தின் பொருட்கள் அனுப்பும் பிரிவான Pulsar Shipping Agencies நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.
அந்த வகையில் இவ்வாறான வலுவான உள்நாட்டு அடித்தளத்தைப் பயன்படுத்தி, Navire Logistics உடனான பங்களிப்பின் மூலம் DPL தற்போது தனது திறன்களை சர்வதேச அரங்கிற்கு விரிவுபடுத்தியுள்ளது. சுங்க முகவர், சரக்கு அனுப்புதல், சரக்கு ஒருங்கிணைப்பு, களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து தீர்வுகள் போன்றவற்றில் நிறுவனம் கொண்டுள்ள நிபுணத்துவமானது, Navire Logistics நிறுவனத்தின் செயற்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா முழுவதும் அதன் சேவைத் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும்.
இந்த முதலீடானது, தமக்கு முழுமையாகச் சொந்தமான ஒரு துணை நிறுவனம் மூலம் ஓமானில் உள்ள செயற்பாடுகளுக்கும் நீடிக்கிறது. அத்துடன் சவூதி அரேபியா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் அதன் செயற்பாடுகளை நிறுவுவதற்கான விரிவாக்கத் திட்டங்களும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது இக்குழுமத்தின் பிராந்திய லொஜிஸ்டிக்ஸ் வலையமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த விரிவாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த D P Logistics நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெலும் கட்டிபேராச்சி, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 60 இற்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுடன், எல்லைகளைத் தாண்டியும் சிறந்த செயற்பாடுகளை நாம் வழங்கி வருகிறோம். சிக்கலான விநியோகச் சங்கிலியில் பலதரப்பட்ட எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு, நடைமுறை ரீதியான மற்றும் தடையற்ற தீர்வுகளை நாம் வழங்கி வருகிறோம். நாம் இலங்கையின் லொஜிஸ்டிக்ஸ் நிபுணத்துவத்தை உலகத்துடன் ஒருங்கிணைக்கும் நிலையில், எமது குழுவின் தொழில்முறை ரீதியான செயற்பாடு, ஆர்வம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி குறித்த அர்ப்பணிப்பு ஆகியன எமது வெற்றியை தொடர்ச்சியாக மேலோங்கச் செய்கிறது.” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது ஒருமைப்பாடும் துல்லியமுமே எமது ஒவ்வொரு செயலின் மையத்திலும் உள்ளன. உள்நாட்டு லொஜிஸ்டிக் சேவையை கையாள்கையிலோ, உலகளாவிய சரக்கு அனுப்பும் சேவையை கையாள்வதிலோ, அதன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் விரிவான அவதானத்துடனும், அசைக்க முடியாத நம்பகத்தன்மையுடனும் அது நிர்வகிக்கப்படுவதை எமது குழுவினர் உறுதி செய்கின்றனர்.” என்றார்.
இந்த சர்வதேச விரிவாக்கத்தின் மூலம், David Pieris Logistics & Shipping Cluster ஆனது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட ஒரு சர்வதேச லொஜிஸ்டிக்ஸ் மற்றும் பொருட்கள் அனுப்புதல் (shipping) சேவை வழங்குநராக மாறுவதற்கான தயார் நிலையில் உள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான வணிக விசேடத்துவத்தை கொண்ட டேவிட் பீரிஸ் குழுமம், வாகனத் துறை, நிதிச் சேவைகள், லொஜிஸ்டிக்ஸ், கப்பல் மூலமான பொருட்கள் அனுப்பல் மற்றும் கடல்சார் சேவைகள், வாகன பந்தயம் மற்றும் பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், சூரிய வலுசக்தி போன்ற துறைகளில் 35 நிறுவனங்களை உள்ளடக்கிய இலங்கையின் மிகப்பெரிய மற்றும் நிதி ரீதியாக நிலையான பல்வகைத் துறை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையகப்படுத்தல் முயற்சியானது, இலங்கையின் நிபுணத்துவத்தை உலகளாவிய சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கான இக்குழுமத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுவதுடன், புத்தாக்கம், ஒருமைப்பாடு, நிலைபேறான வளர்ச்சியில் அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது.

