Dec 29, 2025 - 12:27 PM -
0
ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 இல் பதிவாகியிருந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இன்றைய தினம் கடந்துள்ளதையடுத்து இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் 2,333,797 ஆவது சுற்றுலாப் பயணி இன்று காலை வரவேற்கப்பட்டதாக இலங்கை சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியானது நாட்டின் சுற்றுலாப் பயணத்தில் ஒரு தீர்மானமிக்க மைல்கல்லாக அமைவதுடன், உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கை மீதான நம்பிக்கையையும் அதன் மீண்டெழும் சக்தியையும் வெளிப்படுத்துகின்றது.
சுற்றுலாத்துறை இலங்கை பொருளாதாரத்தின் பிரதான தூணாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், வெளிநாட்டு செலாவணி வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
'டித்வா' புயல் அனர்த்தம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியமையானது இத்துறை மற்றும் அதன் பங்குதாரர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என இலங்கை சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

