Dec 29, 2025 - 01:09 PM -
0
இந்தியாவின் கோவையில் கவரிங் நகைகளை அடகு வைத்து 1.37 லட்சம் ரூபா மோசடி செய்த பெண்ணை, மீண்டும் கடைக்கு வந்தபோது நகை அடகு கடை உரிமையாளர் பிடித்து வைத்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர் சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 9 மாதங்களாக சிவசெல்வி என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி ராஜாராம் அடகு கடையில் இருந்தபோது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து மோதிரத்தை அடகு வைத்து 30,000 ரூபா பெற்றார்.
அப்போது தனது பெயர் சுமதி என்றும், சின்ன மேட்டுப்பாளையத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் மீண்டும் வந்து வளையலை அடகு வைத்து 32,000 ரூபா பெற்று சென்றார். மீண்டும் கடந்த 12 ஆம் திகதி வந்து நகைகளை கொடுத்து 75,000 ரூபா பெற்று வேகமாக சென்றுவிட்டார். ஒரு வாரத்திற்குள் 1.37 லட்சம் ரூபா பெற்றுள்ளார்.
கூலி வேலை பார்ப்பதாக கூறடி பெண்ணிடம் எப்படி இவ்வளவு நகைகள் உள்ளது என ராஜாராமுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பெண்ணிடம் வாங்கிய மொத்த நகைகளையும் முழுமையாக பரிசோதித்துள்ளார். அதில் நகைகள் அனைத்தும் தங்க மூலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சியடைந்த ராஜாராம் அந்த பெண் கொடுத்த முகவரிக்கு சென்றபோது போலி முகவரி என்பது தெரியவந்தது. ஆனால் இது குறித்து அவர் பொலிஸாரிடம் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில், அந்த பெண் கடந்த 17 ஆம் திகதி மீண்டும் கவரிங் நகையை அடகு வைக்க வந்துள்ளார். அவரிடம் நைசாக பேசி கடையிலேயே அமர வைத்துவிட்டு தனது நண்பர் மகேந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரை பிடித்து வைத்த ராஜாராம் நண்பரான மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகேந்திரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அடகு கடைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை கடையின் பின் புறம் பயன்பாட்டில் இல்லாத அறைக்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி வைத்து பிவிசி பைப், கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த பெண் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். பயந்து போன 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து நகை அடகு கடை உரிமையாளர் ராஜாராம் சரவணம்பட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு அவர் பெண் ஒருவரை அடித்துக்கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று பெண் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி விசாரித்தனர்.

