Dec 29, 2025 - 01:23 PM -
0
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதனிடையே கடந்த 27 ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
உலகமெங்கும் இருந்து விஜயின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் குவிந்ததால் மலேசியாவே குலுங்கியது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படம் வெளியாவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் கேரளாவில் 'ஜன நாயகன்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்.எஸ்.ஆர். எண்டர்டெயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை 4:00 மணிக்கு நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆரம்பத்தில், அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி தயாரிப்பாளரிடமிருந்து வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலை மற்றும் தமிழ்நாட்டில் எழுந்த சில சிக்கல்கள் காரணமாக, அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே, கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காலை 6:00 மணிக்கு ஒளிப்பரப்படும். அனைத்து கேரள தளபதி ரசிகர்களிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

