Dec 29, 2025 - 01:32 PM -
0
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வெசாக் பௌர்ணமி தினம் அமைந்துள்ள திகதியை மாற்றியமைக்குமாறு கோரி, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி மற்றும் 30 ஆம் திகதி என இரண்டு பௌர்ணமி தினங்கள் வருகின்றன. தற்போது பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில், மே மாதம் 01 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே மாதம் 30 ஆம் திகதி 'அதி பொசன்' பௌர்ணமி தினமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், மே மாதம் 01 ஆம் திகதி அன்று ‘விசா’ சுப நேரம் அமையாத காரணத்தினால், அந்தத் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாக ஏற்றுக்கொள்வது குறித்து சமூகத்தில் தற்போது கடும் விவாதங்கள் எழுந்துள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவதானம் செலுத்திய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களையும் வினவி, நீண்டகால சாசன மரபுகளுக்கு அமைய 'விசா' அமையும் மே மாதம் 30 ஆம் திகதியையே வெசாக் பௌர்ணமி தினமாகக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த ஆண்டு மே 30 ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாகப் பிரகடனப்படுத்துவது பொருத்தமானது எனவும், வெசாக் தினத்துடன் தொடர்புடைய பாரம்பரிய சாசன மற்றும் சமயக் கடமைகள் மற்றும் அரச விழாவினை மே 30 ஆம் திகதி அன்று நடத்துவதற்கு உரிய அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் மகாநாயக்க தேரர்கள் அந்தக் கடிதத்தில் மேலும் கோரியுள்ளனர்.

