Dec 29, 2025 - 03:54 PM -
0
ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று (29) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் உயிரிழந்தார்.
எனினும் குறித்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக கூறியும், குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரியும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனுவொன்றை கையளித்திருந்தனர்.
குறித்த போராட்டத்தின் பின்னர் முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

