Dec 30, 2025 - 10:52 AM -
0
தையிட்டி காணி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் எம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை என தையிட்டி காணிக்கு உரிமை கோருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வகையில் மக்களின் காணி என்ற ஏற்றுக் கொள்கிற அமைச்சர் தற்போது மாற்றுக் காணி என்று கதைக்கிறார். மக்கள் மாற்றுக்காணியையோ நஷ்ட ஈட்டையோ கேட்கவில்லை.
இவர்கள் மாற்றுக்காணி என்று எதை சொல்லுகிறார்கள் மாற்றுக்காணியை எங்கு வழங்கப் போகிறார்கள்? இவர்கள் காக்கைதீவிலும் மாற்றுக் காணியை வழங்க கூடும். அங்கு வாழ முடியாது.
காணிகளை இழந்த எங்களுடன் கலந்துரையாடாமல் புத்த பிக்குவுடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க பேசுகிறார்கள்.
அரசாங்க அதிபர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் பேசுகிறார்.
அரச பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இந்த காணிகள் தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை.
அரச அதிபரும் ஆளுநரும் எம்மை அழைத்து பேசி இந்த காணிப் பிரச்சினையை தீர்க்கலாம். ஆனால் அவர்கள் உள்நோக்கத்துடன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
காணியை பிக்கு விட்டுக் தருவதாக சொன்னதாக சொல்கிறார்கள். நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை, நீங்கள் அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள். எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். இந்த நிமிடம் வரையும் எங்களுடன் கதைக்கவில்லை.
இலங்கை சுதந்திரம் அடைய முதல் இருந்த காலத்தில் குறித்த தையிட்டிக்கான உறுதி எம்மிடம் உள்ளது.
தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. போராடும் மக்களை நையாண்டி பண்ண வேண்டாம். முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிருபிக்கட்டும் .
சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. நீங்கள் தென் இலங்கையை நோக்கி நகரப் போகிறீர்கள். தையிட்டி மக்களின் காணிகள் பற்றி தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டாம்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். எத்தனை பரப்பு ஒரு ஏக்கர் என்று தெரியாத ஒரு வழக்கறிஞரும், எல்லோரையும் எத்தனையாம் தரம் படித்தார்கள் என்று கேட்கிற பாராளுமன்ற உறுப்பினரும் தையிட்டிக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள். அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. செயலாளர் என்ற பெண்ணை தொடர்பு கொண்டு விளங்கப்படுத்தினேன்.
போராட்டத்தின் நிமித்தம் பிக்கு இறங்கி வந்திருக்கிறார். கொஞ்சம் காணியை விட்டு ஏமாற்றி விட நிற்கிறார்கள் இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு போய் பேசுகிறார்.
24 மணி நேரமும் நேரலை போட்டு செல்கிறார்கள். நாம் எந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களை சந்திப்பது?
நாங்கள் போராடுவதாகவும் கத்துவதாகவும் வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் போராடியே அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
வைத்தியர் கேதீஸ்வரனுக்கும் வைத்தியர் பிரணவனுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்திக்கும் எதிராக ஆதாரங்கள் இருக்கிறது என்று சொல்லி பல விடயங்களை சொன்னார். அந்த ஆதாரங்களை கொண்டு முதலில் வழக்கை போடட்டும். அந்த வழக்கை நடத்தி விட்டு இங்கு வாருங்கள்.
நேரம் ஒரு நேரம் உளறாமல் செயல்படுங்கள். நீங்கள் தகுந்த வைத்தியராக இருந்தால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு போகவில்லை என்று சொன்னால் எங்கள் பிரச்சனை இருந்து விலகுங்கள். கதைக்கும் போது நிதானமாக கதைக்க வேண்டும்.
உங்கள் வார்த்தை தடுமாறுகிறது. தமிழர் மரபை மீறி கதைக்கின்றீர்கள். கலாசாரத்தை மீறி கதைக்கின்றீர்கள்.
ஆட்களை தனிப்பட்ட ரீதியாக தாக்க வேண்டாம். உங்கள் மீது மதிப்பு இருக்கிறது. பாராளுமன்றத்தில் கத்துவதற்கு ஆள் தேவை. சரியான விடயத்திற்கு அதை செய்யுங்கள் என தையிட்டி காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
--

