Dec 30, 2025 - 11:30 AM -
0
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வருபவர்கள் மட்டுமன்றி, விண்ணப்பித்தும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் என அனைவரும் இந்தத் தகவல்களைப் புதுப்பித்தல் கட்டாயமாகும் எனச் அவரச அறிவிப்பு ஒன்று வெளியீடு செய்துள்ளனர். இதற்காக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ஏராளமான பொது மக்கள் கடந்த சில நாட்களாக வருகைத்தந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவர் அனைவரும் நுவரெலியா பிரதேச செயலகத்தின் பொது மலசல கூடம் அருகிலும், மலசல கூடத்தின் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிக்கும் கால்வாய் அருகிலும் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க நேரிடுவதாக தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மலசல கூடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் நீண்ட கால்வாய்யில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வரிசையில் நிற்பவர்கள் துணிகளை கொண்டு மூக்கை அடைத்துக் கொண்டு கழிவுநீரை மிதித்துச் மெதுவாக நடந்து செல்வதால் பல்வேறுபட்ட நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கழிவு நீர் கால்வாய் நீண்ட நாட்களாக துார் வாரப்படாமல் சீரழிந்து வருகிறது இதனால், கழிவு நீர் வெளியேற வழியின்றி கருமை நிறத்தில் தேங்கி நிற்கிறது.
அத்துடன் நுவரெலியாவில் அடிக்கடி பெய்யும் மழை நீரும், கழிவு நீரும் கலந்து குறித்த கால்வாய் நடுவே நிரந்தரமாக தேங்கி கிடப்பதால் இந்த பகுதியில் தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகின்றன. மேலும் அசுத்த தண்ணீர் நிரந்தரமாக தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அஸ்வெசும பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆகவே பொதுமக்கள் நலன் கருதியும் அதிகமாக பொது மக்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தினை நாடி வருகின்றனர் இவ்வாறு வரும் பொது மக்களின் உடல் நிலையை மனதில் கொண்டும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பொது மக்கள் காலை முதல் மாலை வரை நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்னர்.
--

