செய்திகள்
அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்

Dec 30, 2025 - 03:20 PM -

0

அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்

இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்த மாற்றுக் காணிகளையோ அரசாங்கம் இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன. 

இது பாரதூரமான விடயம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டபடி சகல நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்பை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரில் மற்றுமொரு கட்டமாக அநுராதபுரம் மாவட்டம், ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நான் இவ்வாறு பயணம் செய்யும் வேளைகளில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் பேசிய சந்தர்ப்பங்களில், ​​அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்ககளை நிறுத்துவதாக ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் அறிவித்த செய்திகளை நடைமுறையில் காண முடியாதுள்ளதை தெரிந்து கொண்டேன். அரசாங்கம் இவற்றை ஊடகங்கள் மூலம் பொறுப்புடனே விளம்பரப்படுத்தியது. தொழில்முனைவோர், தொழிலதிபர்களுக்கு, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு, விவசாய சமூகத்தினருக்குப் பெற்றுத் தருவோம் என்ற இழப்பீடுகளை அரசாங்கம் உரியவாறு பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த போகத்தில் விவசாயம் சரியாக செய்யப்படாவிட்டால், உணவு நெருக்கடியும் ஏற்படும். எனவே அனைவர் குறித்தும் சிந்தித்து, இந்த விடயத்தை பரந்த கண்ணோட்டத்தில் நோக்கி, அறிவித்த நிவாரணங்களை உரிய தரப்புக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

வாக்குறுதியளித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்காவிட்டால், மக்கள் சார்பாக நாம் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்வோம். 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வாக்குறுதியளித்த விடயங்கள், ஏனைய சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் ஊடாக வாக்குறுதியளித்த, அறிவிப்புச் செய்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வரை, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும். இந்த உரிமைகள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாகும், ஆகையால் மக்கள் இவற்றைப் பெறும் வரை எதிர்க்கட்சி போராடும். இந்த நிவாரணம், சுயதொழில் செய்பவர்கள் முதல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். 

வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படுவது போல, இந்த நிவாரணத் தொகைகளை குறைக்கக் கூடாது. அரசாங்கம் பொய் சொல்லாமல் இதனைச் செய்ய வேண்டும். இந்த நிவாரணங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவ்வாறே, எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ