செய்திகள்
புதிய வருடத்தில் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம்

Dec 30, 2025 - 04:51 PM -

0

புதிய வருடத்தில் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம்

2025 ஆம் ஆண்டு, இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் 2026 ஆம் ஆண்டை ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) முற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை இலங்கை சுங்கத்திணைக்களத்திற்கு விஜயம் சென்ற ஜனாதிபதி, சுங்கப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். 

நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க இலங்கை சுங்கத் திணைக்களம் வழங்கிய பங்களிப்பை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

மேலும், நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் பிரதான நிறுவனமான இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை செயற்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய திட்டங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றி 2026 ஆம் ஆண்டில் நாட்டை பொருளாதார ரீதியில் வெற்றிக்கு இட்டுச்செல்ல அர்ப்பணிப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். 

2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டுக்கு தேவையான வருமானம் கிடைக்காமை மற்றும் நாட்டுக்கு அவசியமான டொலர்கள் கிடைக்காமை ஆகியவையே காரணமானது என்று இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்த்த வருமான இலக்கை அடைந்து, நாட்டில் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை உருவாக்க தற்போது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், கடந்த அனர்த்த நிலைமையை எதிர்கொள்ள அது ஒரு பலமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். 

இலங்கை சுங்கத்திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை மற்றும் முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்த புதிய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. 

வருமானம் சேகரிப்பு, வர்த்தகத்தை இலகுபடுத்தல், சமூக பாதுகாப்பு மற்றும் நிறுவன அபிவிருத்தி ஆகிய 04 பிரிவுகளின் கீழ் இலங்கை சுங்கத் திணைக்களம் செயற்படுவதோடு, அந்தந்த பிரிவுகளின் முன்னேற்றம் குறித்து இதன் போது ஜனாதிபதி கேட்டறிந்தார். நிறுவனத்தில் நேர்மையான கலாசாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்ட உள் விவகாரப் பிரிவு வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. 

சுங்க நடவடிக்கைகளில் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படும் நெரிசல், தாமதம் மற்றும் ஊழல்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், பொருட்கள் சோதனை செய்யும் கட்டமைப்பை நவீனமயபடுத்தும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

மேலும், இலங்கை சுங்கத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், பணியாளர் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, பயிற்சி மற்றும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

நாட்டில் ஸ்திரமின்மையை உருவாக்கும் முயற்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதால், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதைத் தடுப்பதில் விமான நிலையம் மிக முக்கிய இடம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் அரசின் இருப்பு தொடர்பான பொறுப்பை இணங்கண்டு அதன் செயல்பாடுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05