செய்திகள்
அரசியலமைப்பு சபை தனது எல்லையை மீறியுள்ளது

Dec 30, 2025 - 06:13 PM -

0

அரசியலமைப்பு சபை தனது எல்லையை மீறியுள்ளது

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் அரசியலமைப்பு சபை குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் தனது எல்லையை மீறி செயற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளமை தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதற்குத் தேவையான தகுதிகளைக் கொண்ட நபர்களின் பெயர்களை 4 சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்: 

"யாராலும் இதைச் சவாலுக்கு உட்படுத்த முடியாது. ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய தகுதியுள்ள நபர்களையே ஜனாதிபதி இவ்வாறு பெயரிட்டு அனுப்பியுள்ளார். இவர்கள் அனைவரும் பட்டயக் கணக்காளர்கள். நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு வேட்புமனுக்களை சமர்ப்பித்தார். 

இவர்கள் அனைவரும் தகுதியுள்ளவர்கள் மற்றும் அரசியலமைப்பால் கோரப்படும் அளவுகோல்களுக்குப் பொருத்தமான நபர்கள். அத்துடன் மேலும் இரண்டு பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டன; அவர்கள் கணக்காய்வு திணைக்களத்தில் தற்போதுள்ள சிரேஷ்ட கணக்காய்வு அதிகாரிகள். 

இவ்வாறான பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு சபை அதற்கமைய செயற்படவில்லையென்றால், இந்த அரச இயந்திரத்தை அல்லது அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை சீர்குலைக்க அவர்கள் வேண்டுமென்றே செயற்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. 

அனுப்பப்படும் பெயர்கள் அரசியலமைப்பிற்கு இணங்க பொருத்தமானதாக இருந்தால், அந்த நபர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியானவராக இருந்தால், அவருக்குப் பதிலாக வெளியில் சிறந்த ஒருவர் இருக்கிறார் என்று கூறி அந்தப் பெயர்களை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு சபைக்கு உரிமை கிடையாது. 

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரம் உள்ளது. அதற்கமையவே ஜனாதிபதி இதுவரை செயற்பட்டுள்ளார். அதேபோல எதிர்காலத்திலும் செயற்படுவார். அரசியலமைப்பு சபைக்கு நாம் கூறுவது என்னவென்றால், உங்களுக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க செயற்படுங்கள் என்பதாகும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து சிந்தித்து செயற்படுங்கள். உங்களது குறுகிய எல்லைகளுக்குள் செயற்படுவது பொருத்தமானதல்ல."

Comments
0

MOST READ
01
02
03
04
05