Dec 31, 2025 - 12:52 PM -
0
அவுஸ்திரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேமியன் மார்ட்டின் (54), குவீன்ஸ்லாந்து மாகாண வைத்தியசாலையில் மூளைக்காய்ச்சல் (Meningitis) என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி பாக்ஸிங் டே அன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் செயற்கை கோமா நிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டேமியன் மார்ட்டின், கிரிக்கெட் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். 1992 முதல் 2006 வரை அவுஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2000 ஆம் ஆண்டு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட அவர், ஸ்டீவ் வாஹ் தலைமையிலான invincibles என்று அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
2006 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் நடுவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தனது டெஸ்ட் வாழ்க்கையில் 4,406 ஓட்டங்கள் 13 சதங்களுடன் அவர் 46.37 என்ற சராசரி வைத்திருந்தார்.
ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட்டிலும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். 2003 உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில், இறுதிப்போட்டியில், இந்தியாவுக்கு எதிராக 88 ஓட்டங்களை குவித்தார். அந்த போட்டியில் சதம் விளாசிய ரிக்கி பாண்டிங்குடன் சேர்ந்து 234 ஓட்டங்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 5,346 ஓட்டங்கள் சராசரி 40.80, ஐந்து சதங்கள்.
தற்போது கிரிக்கெட் உலகமே டேமியன் மார்ட்டின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறது.

