Dec 31, 2025 - 02:06 PM -
0
விளையாட்டு வீரர்களின் முழுமையான வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி MAS Athlete Training Academy (MATA), SLIIT நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் SLIIT நிறுவனம் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமியின் உயர்கல்வி பங்குதாராக செயல்படும். கல்வியும், தொழில்முறை விளையாட்டும் ஒன்றிணைந்தே முன்னேற வேண்டும் என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் இந்த மூலோபாய கூட்டணி விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுடன் உயர்கல்வி வாய்ப்புகளையும் வழங்கும். இலங்கையின் விளையாட்டுத் துறையில் நீண்ட காலமாக இருந்து வரும் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் தனியார் துறை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து, 2025 டிசம்பர் 30ஆம் திகதி Innovation by Twinery இல் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி சார்பில் MAS Holdings இன் இணை நிறுவனரும் தலைவருமான தேசமான்ய மகேஷ் அமலீன் அவர்களும், SLIIT நிறுவனத்தின் சார்பில் அதன் துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகே அவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அத்துடன், SLIIT நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதி துணைவேந்தரும், நிறுவக முதல்வருமான பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ, மற்றும் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி (Guaranteed) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான ருவன் கேரகல மற்றும் இசுரு குணரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்திற்கான நீண்டகால முதலீடு
இந்த கூட்டணியின் கீழ், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஐந்து முழுமையான இளங்கலை பட்டப் படிப்பு உதவித்தொகைகள் SLIIT மூலம் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியுடன் உயர்கல்வியையும் தொடர முடியும்.
இந்த முயற்சி வாக்குறுதியில் மட்டுமல்ல, நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமியைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் ஏற்கனவே SLIIT-இன் 2025 கல்வியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், 2026 மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்காக கூடுதல் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, கல்விப் பாதையில் முன்னேற தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. கல்வி அல்லது விளையாட்டு என்ற கடினமான தேர்வை எதிர்கொள்ளும் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு இரண்டிலும் வெற்றிபெற இந்த முயற்சி வழிவகை செய்கிறது.
இந்த கூட்டாண்மையைப் பற்றி கருத்து தெரிவித்த தேசமான்ய மகேஷ் அமலீன், எதிர்கால வீர, வீராங்கனைகளை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“MAS நிறுவனத்தில், எங்கள் நாட்டின் உண்மையான பலம் இளைஞர்களின் திறமையில் தான் உள்ளது என்பதில் நாம் எப்போதும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். SLIIT உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கூட்டாண்மை, இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சமமான வாய்ப்புகள், திட்டமிட்ட ஆதரவு மற்றும் விளையாட்டுத் திறனில் உச்சத்தை நோக்கிச் செல்லும் தெளிவான பாதையை உருவாக்க வேண்டும் என்ற கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
விளையாட்டு என்பது அதன் இயல்பிலேயே, குறுகிய காலப்பகுதியில் உச்ச செயல்திறனை நாடும் துறையாகும். ஒரு விளையாட்டு வீரரின் பயணம் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, கல்வி என்பது விளையாட்டுக்கான மாற்றாக அல்ல. அவர்களின் போட்டி காலம் முடிந்த பிறகும் அவர்களது வாழ்க்கையைத் தாங்கும் உறுதியான அடித்தளமாக இருக்க வேண்டும்.
கல்வியை விளையாட்டு வளர்ச்சியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், சிறப்புடன் போட்டியிடக்கூடிய, தெளிவான சிந்தனையுடன் செயல்படும், மற்றும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குத் தன்னம்பிக்கையுடன் நகரக்கூடிய சமநிலையான மனிதர்களையும் விளையாட்டு வீரர்களையும் உருவாக்க நாங்கள் உதவி செய்கிறோம். இந்த முயற்சியில் SLIIT உடன் இணைவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும், உலக மேடையிலும் அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையிலும் எமது இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெற்றியடையக்கூடிய ஒரு வலுவான மேடையை தொடர்ந்து கட்டியெழுப்ப உறுதியாக உள்ளோம்.” என்றார்.
இதே கருத்தை வலியுறுத்திய SLIIT துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகே கூறியதாவது, “SLIIT துணைவேந்தராக, இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களை ஆதரிக்கும் நோக்கில் SLIIT மற்றும் MAS நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த கூட்டாண்மை மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வளர்ந்து வரும் விளையாட்டு திறமைகளை வளர்ப்பது, நமது இளைஞர்களிடையே ஒழுக்கம், மனவலிமை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை ஊக்குவிக்க அவசியமானதாகும்.
ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கிய சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, உலக மேடையில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே எங்கள் கனவும் இலக்கும் ஆகும். அதுமாத்திரமின்றி. இந்த முயற்சி, முழுமையான வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, அடுத்த தலைமுறையினர் தங்களின் முழுத் திறனை வெளிப்படுத்தவும், எமது நாட்டின் எதிர்காலத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கவும் வலுசேர்க்கும் எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என தெரிவித்தார்.
விளையாட்டு துறையினைத் தாண்டி விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி இலங்கையில் எதிர்கால ஒலிம்பியர்களை உருவாக்கும் நோக்கில் உருவான முதல் மற்றும் மிகப்பெரிய அரசு-தனியார் கூட்டாண்மையாக மாறியுள்ளது. உயர்தர பயிற்சியைத் தவிர, இந்த அகடமி விளையாட்டு வீரர்களுக்காக ஒரு முழுமையான ஆதரவு வசதிகளையும் வழங்குகிறது. அதில் முறையான பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள், ஊட்டச்சத்து, விளையாட்டு அறிவியல் சேவைகள், மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு உதவி, சுகாதார காப்புறுதி, மற்றும் தற்போது SLIIT உடன் மேற்கொள்ளும் இந்த கூட்டாண்மையின் மூலம் கல்வி மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.
இந்த ஒருங்கிணைந்த அமைப்பு, விளையாட்டில் சிறப்பை நாடும் எந்தவொரு விளையாட்டு வீரருமே கல்வியில் பின்தங்கிவிடாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீண்டகால விளையாட்டு வீரர் நலனுக்கும், நிலைபேறாண்மைக்கும் அடிப்படை அம்சமாகும்.
எதிர்காலத்தை நோக்கி: 2028 மற்றும் அதற்குப் பின்னர் சம்பியன்களை உருவாக்குதல் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி, 2028 லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்கள் குழுவை தயாரிப்பது என்ற தனது பணியை தொடர்கின்றது. இதன் பகுதியாக SLIIT உடனான இந்தக் கூட்டாண்மை, விளையாட்டில் மட்டுமல்ல, அதன் பின்னர் வாழ்க்கையில் சிறப்பாக வழிநடத்தக்கூடிய வீரர்களையும் தலைவர்களையும் உருவாக்கும் முக்கிய முதலீடாக அமைகிறது.
தனியார் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு இவை ஒரு பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணையும்போது என்ன சாத்தியம் என்பதற்கு இந்த கூட்டாண்மை சான்றாக உள்ளது. இலங்கையின் எதிர்காலத்திற்காக மன வலிமை கொண்ட, கல்வியறிவு பெற்ற மற்றும் உத்வேகம் நிறைந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே அந்த பொதுவான இலக்காகும்.

