Dec 31, 2025 - 05:10 PM -
0
தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்ள ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து குறித்த காணிகளை விடுவிப்பதற்கான யோசனை அடங்கிய வரைபொன்று மாவட்டச் செயலாளரினால் துறைசார் தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலர் ம. பிரதீபன் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு இடையே இன்று (31) நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக காணி உரிமையாகர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் தெளிவுபடுத்தல் ஊடக சந்திப்பை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை விடுவிக்க வேண்டும் என நாம் கடந்த மூன்று வருடங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும் இதுவரை எந்தவிதமான முடிவுகளோ தீர்வுகளோ கிடைக்கவில்லை.
ஆனாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட உதவி அரச அதிபராக (காணி) முரளிதரன் இருந்தபோது காணிகள் தொடர்பில் துல்லியமான தரவுகளுடன் தீர்வுக்கான முயற்சி எடுக்கப்பட்டும், ஆனால் அது ஏதோ ஒரு விதத்தில் கைநழுவிப் போனது.
அதன் பின்னர் தற்போது இந்த முயற்சி மாவட்டச் செயலாளர் பிரதீபனால் முன்னெடுக்கப்பட்டு இன்று காணி உரிமையாளர்களான எம்முடன் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது காணிகளின் உரிமம் மக்களுக்கான உரிமையாளர்களின் உரிமங்களின் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்ட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதையடுத்து அக்காணிகளின் விடுவிப்புக்கான பொறிமுறை குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது விகாரை இருக்கும் குறித்த நிலப்பரப்பு தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விகாரைக்கு மேற்குப் புறமுள்ள காணிகளை மிக விரைவில் விடுவிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் மிகுதிக் காணிகள் 4 கட்டங்களாக விடுவிப்பதற்கும் குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய பல கட்டடங்களை அகற்றி வேறிடத்துக்கு கொண்டு செல்லும் வகையியான செயற்பாடுகளுக்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்டங்கள் வரையறை வகுக்கப்படுள்ளது.
இதேநேரம் விகாரை அமைந்துள்ள காணி மூன்று தரபினருக்குரியதாக இருக்கின்றது. ஆனாலும் அந்த காணிக்கான மாற்றுக் காணி குறித்தோ, நஷ்ட ஈடு தொடரிலும் எந்தவிதமான தீர்மானமோ யோசனையோ எடுக்கப்படவில்லை
அத்துடன் இந்த முயற்சி ஒரு யோசனையாகவே இன்று தீர்மானிக்கப்பட்டு துறைசார் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
இது இறுதி முடிவாக அல்லாது யோசனையாகவே இருப்பதனால் நாம் எதிர்வரும் 3 ஆம் நாளன்று ஏற்கனவே தீர்மானித்திருந்த தையிட்டிப் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு காணி உரிமையாகர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
--

