Dec 31, 2025 - 11:21 PM -
0
16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த 25 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகம் மற்றும் ராகம, பேரலந்த பகுதிகளில் முன்னெடுத்த கூட்டுச் சோதனை நடவடிக்கைகளின் போது, இந்த வெளிநாட்டு சிகரெட் தொகையும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிறுவனம், கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேகநபரும், 'இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனம், கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து ராகம, பேரலந்த பகுதியில் முன்னெடுத்த சோதனையின் போது சட்டவிரோதமாக வைத்திருந்த 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 54 மற்றும் 65 வயதுடைய பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களும் வெளிநாட்டு சிகரெட் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையம் மற்றும் ராகம பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

