Jan 1, 2026 - 06:45 AM -
0
2026ஆம் ஆண்டு இலங்கை திருநாட்டிற்குப் பல்வேறு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றும், அவற்றை உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக நாடு சந்தித்து வரும் நெருக்கடிகள் தற்போது புதிய பரிமாணங்களை எட்டியுள்ளன. இவ்வாறான சிக்கலான சூழலை வெறும் ஒருதலைப்பட்சமான திட்டங்களால் மட்டும் வெற்றிகொள்ள முடியாது. எனவே, சர்வதேச மற்றும் தேசிய அளவில் முன்னெப்போதையும் விட பரஸ்பர ஒத்துழைப்பு தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.
"ஏமாற்றம் மற்றும் உதவியற்ற நிலையில் முடங்கிக் கிடப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது" என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். உடன்படக்கூடிய விடயங்களில் இணக்கப்பாட்டுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல், உண்மை மற்றும் நீதி தொடர்பான விடயங்களில் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளுக்கு இடையே வேறுபாடுகள் இல்லை. ஏனெனில் மனிதர்களை நடத்துவது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.
நாட்டின் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பாகுபாடின்றி ஒரே சீராகக் கருதி, அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட மதத் தலைவர்கள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தைரியமும் சக்தியும் கிடைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

