Jan 2, 2026 - 01:07 PM -
0
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று (2) தையிட்டி விகாரை காணிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரைக்கு ஒதுக்கப்பட்ட காணி இருந்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தெரிவித்தார்.
கடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குறித்த விகாரை அமைந்துள்ள காணிகளை சென்று பார்வையிட்ட குழுவினர் காணி உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு காணிகளை மீள் கையளிக்க வேண்டும் என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியருடையது. அந்த காணிகளை அவர்களிடம் மீள கையளிக்க வேண்டும்.
தையிட்டி விகாரை தற்போது அமைந்துள்ள பகுதிகளை என்னிடம் தந்தால் தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணிகளை தருவேன்.
பொலிஸார் போராடும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாறாக அவர்களை அச்சுறுத்தி , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர கூடாது என தெரிவித்தார்.
--

