Jan 2, 2026 - 05:24 PM -
0
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்னார் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (2) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சட்டத்தரணி எஸ். டினேசன் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் B-9125 என்ற வழக்கின் கீழ் முற்படுத்தப்பட்டு, முருங்கன் பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்டதால், அந்த வழக்கைக் கையாண்டு வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இவரைப் பொறுப்பேற்றனர்.
சந்தேக நபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முற்படுத்தப்பட்டு, கொழும்பு சி.ஐ.டி. அலுவலகத்தில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்தத் தடுப்புக் காவல் இன்று வெள்ளிக்கிழமை (2) மதியம் 1 மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக 90 நாட்கள் தடுத்து வைக்க சி.ஐ.டி.யினர் அனுமதி கோரினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் இத்தகைய அனுமதியைப் பெற பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியமாகும்.
இன்று மதியம் 1.00 மணி வரை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைக்காததால், சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது.
எனினும், அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடமிருந்து அனுமதி கிடைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யினரால் தாக்கல் செய்யப்பட்ட 'நகர்தல் பத்திரத்தின்' (Motion) மூலம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கினார்.
--

