செய்திகள்
CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில்

Jan 2, 2026 - 08:02 PM -

0

CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல்  விரைவில்

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்கான எதிர்பார்க்கப்படும் செலவு 137,016 மில்லியன் ரூபாவாகும் எனவும், தற்போதுள்ள கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருமானம் 113,161 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதற்கமைய, 13,094 மில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை நிலவுவதால், மொத்த மின்சாரக் கட்டணத்தை 11.57% சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை முன்மொழிந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது. 

இதில் நிலையான கட்டணம் மற்றும் அலகுக் கட்டணம் ஆகிய இரண்டையும் அதிகரிக்க மின்சார சபை பிரேரித்துள்ளது. 

முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு அமைய, வீட்டுப் பாவனை மின்சாரக் கட்டணங்கள் முதல் 60 அலகுகள் வரை இரண்டு கட்டங்களாகக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

முதல் 30 அலகுகள் (0-30): ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 4.50 ரூபா கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்தக் கட்டணத்தை 80 ரூபாவிலிருந்து 14.11 ரூபாவால் அதிகரித்து 94.11 ரூபாவாக மாற்றவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

31 முதல் 60 அலகுகள் வரை ஒரு அலகுக்கு அறவிடப்படும் 8 ரூபா கட்டணத்தை 9.41 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்த நிலையான கட்டணத்தை 37.03 ரூபாவால் அதிகரித்து 247.03 ரூபாவாக நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 

61 முதல் 90 அலகுகள் வரை ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 18.50 ரூபா கட்டணத்தை 21.76 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 

91 முதல் 120 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 24 ரூபாவாக உள்ள கட்டணத்தை 28.23 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

121 முதல் 180 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 41 ரூபாவாக உள்ள கட்டணத்தை 48.23 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 

181 அலகுகள் அல்லது அதற்கு மேல் ஒரு அலகுக்கு 61 ரூபாவாக இருந்த கட்டணத்தை 71.76 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

இந்த வகைகளுக்கான மாதாந்த நிலையான கட்டணங்களையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அறநிலையங்களில் முதல் 30 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 4.50 ரூபாவாக உள்ள கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், 75 ரூபாவாக இருந்த மாதாந்தக் கட்டணத்தை 88.23 ரூபாவாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 

31 முதல் 90 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை அதிகரிக்கவும், அந்த வகையின் மாதாந்தக் கட்டணத்தை 35.27 ரூபாவால் அதிகரிக்கவும் கோரப்பட்டுள்ளது. 

91 முதல் 120 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 9.41 ரூபாவாகவும், 121 முதல் 180 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 22.35 ரூபாவாகவும் அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 

181 அலகுகள் அல்லது அதற்கு மேல் அலகு ஒன்றின் விலையை 26 ரூபாவிலிருந்து 30.59 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. 

கைத்தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் 300 அலகுகள் அல்லது அதற்குக் குறைவான அலகு ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 9.41 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. 

300 அலகுகளுக்கு மேற்பட்டவைக்கு அலகு ஒன்றின் விலை 17 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. 

எனினும், இலங்கை மின்சார சபையினால் பராமரிக்கப்படும் மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்களின் (EV Charging Stations) கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சார சபையின் இந்த யோசனையை ஆய்வு செய்து, அது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய ஜனவரி மாதம் இரண்டாவது வாரமளவில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 6 வார காலப்பகுதிக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05