Jan 4, 2026 - 09:18 PM -
0
அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவியும் அமெரிக்க இராணுவ படையினால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி மீது நிவ்யோர்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க சட்டமா அதிபர் பமீலா போண்டி கூறினார்.
எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி வெனிசுலா விவகாரம் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
வெனிசுலாவில் காணப்படும் சூழலை கவனத்தில் கொள்ளும்போது, அந்நாட்டில் ஜனநாயகம் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ஜப்பான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற அடிப்படையான மதிப்புமிக்க விடயங்கள் மற்றும் கொள்கைகளை மதித்தலை ஜப்பான் மரபாக கொண்டுள்ளது என குறிப்பிட்ட அவர், நமது நாட்டின் இந்த நிலையான நிலைப்பாட்டின் அடிப்படையில், ஜி7 மற்றும் பிராந்திய நாடுகள் உள்ளிட்ட தொடர்புடைய நாடுகளுடன் ஜப்பான் அரசு, தொடர்ந்து நெருங்கிய முறையில் ஒருங்கிணைந்து செயல்படும்.
இதன் வழியே ஜப்பான் மக்களின் உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து வெனிசுலாவில் ஜனநாயகம் மீண்டும் திரும்புவதற்கும், சூழலை நிலைநிறுத்துவதற்கும் அதற்கான விடயங்களை உறுதிப்படுத்தவும் செய்யும் என்று கூறினார்.

