Jan 4, 2026 - 10:35 PM -
0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (05) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும், தவறினால் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெறப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அவர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல இன்று (04) கைது செய்யப்பட்டார்.
அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை, முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக, அவரது மகன் ஜொஹான் பெர்னாண்டோவிற்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

