Jan 9, 2026 - 07:31 AM -
0
சட்டவிரோத மதுபானம் அருந்தி 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குறித்த பிரதான சந்தேகநபர், கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நேற்று (08) மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானத்தை அருந்திய 06 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு பெண் சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, கடந்த 7ஆம் திகதி மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

