Jan 9, 2026 - 09:03 AM -
0
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை கவிழ்க்கவும், மறைந்த முன்னாள் ஷா மன்னரின் நாடு கடத்தப்பட்ட மகனான ரெசா பஹ்லவியை மீண்டும் கொண்டு வரவும் கோரி அந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரானில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக அந்த நாட்டு உச்ச தலைவருக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றது.
இந்த போராட்டமானது தொடர்ந்தும் 12 வது நாளாக இன்றும் நீடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள 31 மாகாணங்களிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று தகவல் வௌியிட்டுள்ளது.
அவர்களில் ஐந்து குழந்தைகளும், எட்டு பாதுகாப்புப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை ஈரானின் பாதுகாப்பு படையினால் 2,270 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈரானில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுகின்றமைக்கு அமெரிக்காவும் தமது கண்டனங்களை வௌியிட்டுள்ளது.

