Jan 9, 2026 - 09:55 AM -
0
யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கிற பட்சத்தில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாகச் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
யாழ். மாவட்டத்திற்குரிய தீவகக் கடல் போக்குவரத்துகள் நேற்று (08) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மீனவர்கள் எவரும் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, ஜனவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் 100 மில்லிமீற்றர் (100 mm) வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவக் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிராம மட்ட அலுவலர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் தகவல்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பகிரப்பட்டு வருகின்றன. அனைத்து மட்ட உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் இருப்பதால், பொதுமக்கள் தேவையற்ற முறையில் பீதியடையத் தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
--

