Jan 9, 2026 - 10:33 AM -
0
இலங்கை முழுவதும் முன்பிள்ளை பராய வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல் சாதனை
இலங்கையின் முன்பிள்ளை பராய மேம்பாட்டு துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், Hemas Outreach Foundation (ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளை) தனது 75ஆவது 'பியவர' (Piyawara) பாலர் பாடசாலையைத் திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய பாலர் பாடசாலையானது ஹோமாகம பிரதேச சபையின் கீழ், ஜேர்மனியின் 'Fly & Help' நிறுவனத்துடனான பங்காளித்துவத்துடன் நிறுவப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளை பராய மேம்பாட்டுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘பியவர' திட்டமானது, இலங்கையின் ஒவ்வொரு குழந்தையும் தமது ஆரம்ப கல்விப் பருவத்தில் சிறப்பான கல்வி கற்பதற்கும், வளர்ச்சியடைவதற்கும் சமமான வாய்ப்பைப் பெறுவதற்குமான உன்னத நோக்கத்தில் செயற்பட்டு வருகிறது. இன்று, சிறுவர் நட்பு சூழல் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட இந்தப் பியவர மாதிரி திட்டத்தின் மூலம் வருடாந்தம் 4,000 இற்கும் மேற்பட்ட பாலர் பாடசாலை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஹோமாகமவில் இடம்பெற்ற இந்தத் திறப்பு விழாவில் ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர். Hemas Holdings PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட தலைமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளையின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் உரையாற்றிய ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளையின் தலைவர், "75ஆவது பியவர பாடசாலையை திறந்து வைப்பதானது, ஹேமாஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்லாது, இதற்கு உதவிய ஒவ்வொரு சமூகத்திற்குமான பெருமைக்குரிய தருணமாகும். கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக சிறுவர்கள் பாதுகாப்பான சூழலில் வளர்வதற்கான இடத்தை வழங்கி வரும் நாம், தரமான பாலர் கல்வியை இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு விரிவுபடுத்த அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என்றார்.
ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் கசுன் ரத்நாயக்க குறிப்பிடுகையில், “எமது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் அதேவேளை, அவர்களின் அறிவுத்திறன் மற்றும் சமூகத் திறன்களை வளர்த்து அவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதே எமது முதன்மை இலக்காகும். சிறுவர்களின் நுண்ணறிவு, படைப்பாற்றல், சமூகத் திறன்கள் மற்றும் பாடசாலை வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியத் திறன்களை வளர்ப்பதன் மூலம், எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவது தொடர்பான விசேடத்துவம் வாய்ந்த பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம்.” என்றார்
ஹேமாஸ் அவுட்ரீச் அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரோமி மசகோரள இத்திட்டத்தின் பரந்த தாக்கம் குறித்து கருத்து வெளயிட்டார், “பியவர என்பது வெறுமனே பாலர் பாடசாலைகளின் பட்டியல் மாத்திரமல்ல. இது முன்பிள்ளை பராய மேம்பாட்டிற்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். கடந்த 23 வருடங்களில் 100,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த கட்டடங்களின் உட்கட்டமைப்புகளின் நிர்மாணத்திற்கு அப்பால் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், பெற்றோரின் ஈடுபாடு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆதரவு என ஒட்டுமொத்த முன்பிள்ளை பராய மேம்பாட்டுச் சூழலையும் வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும். அத்துடன் அனர்த்த வேளைகளின் போது அவசர தலையீடுகளை மேற்கொள்வதும் எமது பொறுப்பாகும்.” என அவர் குறிப்பிட்டார்.
ஒரேயொரு பாலர்பாடசாலையில் ஆரம்பித்து இன்று 75 பாலர் பாடசாலை என வளர்ந்துள்ள இந்தப் பயணமானது, கூட்டு முயற்சியின் வலிமையை நிரூபிப்பதோடு, பின்தங்கிய சமூகங்களில் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்துகிறது.
தற்போது மேலும் பல பாடசாலைகள் கட்டுமானப் பணியில் உள்ள நிலையில், ஒவ்வொரு இலங்கை குழந்தைக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உறுதிப்படுத்துவதை ‘பியவர’ திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
Hemas Outreach Foundation பற்றி
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC) நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த அறக்கட்டளையானது, இலங்கையில் முன்பிள்ளை பராய மேம்பாட்டை மையமாகக் கொண்டு சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்கிறது. இந்த அறக்கட்டளையானது, 'எந்தவொரு குழந்தையையும் கைவிடக் கூடாது' எனும் அனைவரையும் உள்ளீர்க்கும் உலகத்தை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
இந்த அறக்கட்டளையானது பின்வரும் இரு முக்கிய தேசிய முயற்சிகளை முன்னெடுக்கிறது.
● Piyawara – இலங்கையில் உள்ள பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஆரம்பக் கல்வியை வழங்கும்
● Ayati மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான தேசிய மையம் – மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு உயர்தர சிகிச்சைகளுக்கான தலையீடுகளை வழங்குதல் மற்றும் அவர்கள் குறித்து சமூகத்தில் நிலவும் தாழ்வான எண்ணங்களை குறைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தல்.
இதுவரை 150,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இந்த அறக்கட்டளையின் கூட்டு முயற்சிகள் மூலமான சாதகமான பலன்களைப் பெற்றுள்ளனர்.

