Jan 12, 2026 - 11:00 AM -
0
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் நிலவும் கடும் கடலரிப்பு காரணமாக, அங்கிருக்கும் பொது மயானம் பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளது. இதனால் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்களின் மனித எச்சங்கள் வெளியே தெரிவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஏற்பட்ட 'டித்வா' புயல் மற்றும் தற்போதைய தாழமுக்கம் காரணமாக, மாளிகைக்காடு பகுதியில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக அமைந்துள்ள இந்த மயானமானது, மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது பகுதி மக்களின் பிரதான அடக்கத்தலமாகும். தொடர்ச்சியான கடலரிப்பினால் கபூர் (மண்ணறை) தடயங்கள் அழிந்து, எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கடற்கரையோரம் சிதறிக் காணப்படுகின்றன.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் ஆலோசனையின் பேரில், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்தார்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியிலும், கடந்த நான்கு நாட்களாக கனரக வாகனங்களின் உதவியுடன் தற்காலிகக் கல்லணைகளை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். இவரது இந்தத் துரித நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடுகள் எதுவும் தற்போது பலனளிக்கவில்லை. இதற்கொரு நிரந்தர தீர்வை அதிகாரிகள் வழங்க வேண்டும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
--

