Jan 12, 2026 - 12:12 PM -
0
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி நேற்று (11) வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் துடுபெடுத்தாடிய நியூசிலாந்து 300 ஓட்டங்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
301 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 306 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் 40 ஆவது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இப்போட்டியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் கோலி. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி தனது 624 ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை அடைந்தார்.
சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், 34,357 ஓட்டங்களை குவித்து, இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

