Jan 12, 2026 - 04:04 PM -
0
மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை?, எந்த உடனடி நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் எழுப்பி உள்ளனர். இந்த விசாரணை மாலை 7.00 மணி வரைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையின் முக்கிய நடவடிக்கையாக, தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிவு செய்த சிபிஐ, அவரை இன்று (12) விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் இன்று காலை டெல்லி சென்றார். பின்னர், சிபிஐ தலைமையகத்துக்குச் சென்று விசாரணையில் நேரில் ஆஜரானார்.
இந்த விசாரணையின்போது மூன்று முக்கிய கேள்விகளை சிபிஐ, விஜய்யிடம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேள்விகள் கடுமையானவை மற்றும் முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

