Jan 13, 2026 - 08:20 AM -
0
'டித்வா' புயலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (12) இரவு டிபி தெரண அலைவரிசையில் ஒளிபரப்பான ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
"நிச்சயமாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்களின் போது, நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பத்தில் நாட்டில் நிலவும் நிலைமையே எப்போதும் கவனத்திற் கொள்ளப்படும்.
எதிர்காலம் குறித்து ஒரு கணிப்பை மேற்கொண்டுதான் கொள்கைகள் மற்றும் இலக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன.
எனவே, ஏதேனும் மாற்றம் ஏற்படும் போது நிச்சயமாக இலக்குகளும் மாற வேண்டும். இது இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகும்.
அதன்படி பார்த்தால், இது எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும், முன்னதாகத் திட்டமிட்டபடி டிசம்பர் 15ஆம் திகதியளவில் ஐந்தாவது மீளாய்வை (Review) நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால் இந்த புயல் காரணமாக, அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிக செலவினங்கள் இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
இலக்குகள் மாற வேண்டும். எனவே, இந்த மீளாய்வை ஒரு வகையில் ஒத்திவைக்க வேண்டியுள்ளது. இது குறித்து மதிப்பீடு செய்வதற்கு கால அவகாசம் தேவை.
முழுமையான மதிப்பீட்டைச் செய்த பின்னரே அடுத்த ஆண்டுக்கு அப்பாற்பட்ட இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும்.
அதற்காகக் கூடுதல் காலத்தைப் பெற்றுக்கொண்டு, இந்த இடத்திற்குப் பொருத்தமான ஆர்.எஃப்.ஐ (RFI - Rapid Financing Instrument) வசதியைப் பெறுவதே பொருத்தமானது.
2020 ஆம் ஆண்டு கொவிட் காலத்தில் எமக்கு இது கிடைக்கவில்லை, ஏனெனில் அப்போது கடன் நிலைத்தன்மை (Debt Sustainability) இருக்கவில்லை.
தற்போது கடன் நிலைத்தன்மை மீண்டும் எட்டப்பட்டுள்ளதால், ஏனைய உடன்படிக்கைகளைச் செய்ய வேண்டிய தேவையின்றி இரண்டு வாரங்களுக்குள் அந்த உரிய நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்." என்றார்.
புயலினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்து, அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வைத் தள்ளிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருட இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 8 பில்லியன் டொலர் எல்லையை எட்ட வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

