Jan 13, 2026 - 10:04 AM -
0
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்தது.
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துகள் கேட்டறியப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களின் பிரதிநிதிகள், சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களின் வகிபாகம் மற்றும் நுண்நிதி மற்றும் கடன் நிறுவனங்களிடமிருந்து இவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் விளக்கினர்.
இலங்கையின் கிராமப்புறங்களில் பெண்கள் உட்பட மக்களின் அபிவிருத்தியில் சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்கள் தனித்துவமான பங்கை வகிக்கின்றன என்பதையும் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் ஊடாக நுண்நிதி மற்றும் கடன்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் ஒரே அதிகாரசபையின் கீழ் கொண்டுவரப்படும் என்றும், இதனால் இது சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களின் பகிபாகத்தைப் பாதிக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், உத்தேச சட்டமூலத்தில் சமூக அடிப்படையிலான நிதி சங்கங்கள் குறித்து தனியான வியாக்கியானம் வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறான சங்கங்களை பொதுவான அளவுகோல்கள் மூலம் ஒரு அதிகாரசபையால் ஒழுங்குபடுத்துவது அந்த நிறுவனங்களின் அடிப்படை நோக்கங்களைத் தடுக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சமூக அடிப்படையிலான நிதி சங்கங்களின் பிரதிநிதிகள், தங்கள் சங்கங்களை ஒழுங்குமுறைக்கு உட்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியபோதும், தமது அடிப்படை நோக்கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சட்டமூலத்தைத் திருத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்ட குழுவின் தலைவர், நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தில் “சமூக அடிப்படையிலான நிதி நிறுவனங்கள்” என்பதை சரியான முறையில் வரையறுக்கும் வகையிலும், அவற்றின் அடிப்படை நோக்கங்களைப் பாதிக்காத வகையில் சட்டத்தைத் திருத்துவதற்குமான முன்மொழிவை முன்வைத்தார்.
இதற்கு அமைய, திருத்தங்களுக்கு உட்பட்டு நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்திற்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சட்டமூலத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கெல்லையுடன் தொடர்புபட்ட விடயங்களும் இருப்பதால் இதனை குறித்த குழுவுக்கு ஆற்றுப்படுத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுன ஆரச்சி, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலின சமரக்கோன் மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

