Jan 13, 2026 - 12:12 PM -
0
டிட்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டியெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், Rebuild Sri Lanka நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் 100 மில்லியன் ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது.
HNB வங்கியின் சார்பாக, எமது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக டிட்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஒற்றுமையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டில் உருவான ஒரு நிறுவனம் என்ற வகையில், நாம் சேவை செய்யும் சமூகங்களுடன் எமக்கு ஆழமான பிணைப்பு உள்ளது. எமது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களில் பலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இக்கட்டான காலப்பகுதியில் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதற்கும், அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நாம் உறுதியுடன் இருக்கின்றோம்.
“Rebuild Sri Lanka நிதியத்திற்கு HNB வழங்கியுள்ள பங்களிப்பானது, இந்த கூட்டுப் பணிக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். இது நீண்ட மற்றும் சவாலான ஒரு செயன்முறை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இருப்பினும், உடனடியான மற்றும் நீண்டகால மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவும் உறுதியுடனும் இருக்கின்றோம்,” என HNB முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
நிதியத்திற்கான நேரடி நிதி உதவியைத் தவிர, வங்கியின் பரந்த மற்றும் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, நாடு தழுவிய ரீதியிலான பேரிடர் நிவாரணத் திட்டமொன்றையும் HNB ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2,500 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய நிவாரண மற்றும் ஊட்டச்சத்து பொதிகளை வங்கி வழங்கியது. கண்டி, கம்பஹா, கடுவலை மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பொருட்கள் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமமாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அவை இலங்கை இராணுவத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அதேவேளை, பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தனிப்பட்ட மீட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அவர்களுக்கு எனத் தனிப்பயனாக்கப்பட்ட நிவாரணப் பொதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை நிலையை வழமைக்குக் கொண்டுவர உதவும் வகையில், கவனமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து பொருட்கள், தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகள் இந்த நிவாரணப் பொதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக, பேரிடரினால் பாதிக்கப்பட்ட அனைத்து HNB ஊழியர்களுக்கும் விசேட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

