Jan 13, 2026 - 12:18 PM -
0
கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தின் பிரதான நிர்மாணிப்பு நிறுவனமான CHEC Port City Colombo (Pvt) Ltd, இச்செயற்திட்டம் தற்போது வர்த்தகரீதியான செயல்பாடுகள் மற்றும் கட்டட நிர்மாணத்தில் புதிய சகாப்தத்தில் காலடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, இந்த உட்கட்டமைப்பு நிர்மாணத்தில் மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
“2014 ம் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தருணம் முதற்கொண்டு, இலங்கைச் சமூகத்தின் நலனை மேம்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுதல் என்பனவே கொழும்பு துறைமுக நகரத்தின் மூலோபாய இலக்கின் மையமாக எப்போதும் திகழ்ந்து வருகின்றன,” என்று CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஸியோங் ஹொங்ஃபெங் அவர்கள் குறிப்பிட்டார். “269 ஹெக்டேயர் விஸ்தீரணம் கொண்ட இச்செயற்திட்டத்தின் அளவும், பிரமாண்டமும் தெற்காசியாவில் பலம்வாய்ந்த பிராந்திய சக்தியாக மாறும் இலங்கையின் ஆற்றல் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் அதேசமயம், இலங்கை மக்கள் அனைவரும் அபிலாஷை கொள்ளக்கூடிய எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவதையும் காண்பிக்கின்றது.”
தேசிய மற்றும் பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயற்திட்டம் என்ற வகையில், பல்வேறுபட்ட சவால்மிக்க சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதும், அவற்றிலிருந்து வெற்றிகரமாக தலைநிமிரும் திடசங்கல்பத்தை கொழும்பு துறைமுக நகரம் காண்பித்து வந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, அரசியல் மாற்றங்கள், 2019 உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் தாக்கம், ஒட்டுமொத்த உலகினையும் ஆட்டிப்படைத்த கோவிட்-19 தொற்றுநோயின் இடையூறு மற்றும் 2022 பொருளாதார நெருக்கடி என பல்வகைப்பட்ட சவால்கள் நிறைந்த சூழல்களுக்கு கொழும்பு துறைமுக நகரம் முகங்கொடுத்துள்ளது. இவ்வாறு பல தடைகளுக்கு மத்தியிலும், தனது திட்டத்தை தொடர்ந்தும் உறுதியாக முன்னெடுத்து, தெற்காசியாவில் மாற்றத்திற்கு வித்திடும் வல்லமை படைத்த உலகத்தரம் வாய்ந்த முதலீட்டு அமைவிடமாக மாறும் மூலோபாய இலக்கினை கட்டிக்காத்துள்ளது.
1998 ம் ஆண்டு முதல் இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பல நிர்மாணச் செயற்திட்டங்களை நிர்வகித்துள்ள China Harbour Engineering Company (CHEC) ன் துணை நிறுவனம் என்ற வகையில், தேசத்தின் நீண்ட கால பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் தனது அர்ப்பணிப்பில் இந்த பிரதான நிர்மாணிப்பாளர் நிறுவனம் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது. கடலிலிருந்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் 2019ல் முற்றுப்பெற்றதைத் தொடர்ந்து, போட்டித்திறன் வாய்ந்த பிராந்திய முதலீட்டு அமைவிடம் என்ற நேர்மறை தோற்றத்தை வெளிப்படுத்தியவாறு பல்வேறுபட்ட முக்கியமான சாதனை மைல்கற்களை கொழும்பு துறைமுக நகரம் எட்டியுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முழுமையாக நிறைவேற்றப்பட்ட 2021 ம் ஆண்டு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமும் அவற்றுள் அடங்கியுள்ளது. இலங்கையில் சர்வதேச முதலீட்டாளர்கள் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுப்பதை மேம்படுத்துகின்ற முற்போக்கான ஒழுங்குமுறைச் சூழலொன்றாக அமைந்துள்ள கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நிறுவியிருந்தது. நவீன சேவை ஏற்றுமதிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற 146 பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களை தற்போது கொண்டுள்ள ஒரு துடிதுடிப்பான வணிகக் கட்டமைப்பை வளர்க்க அது உதவியுள்ளது. முக்கியமான உட்கட்டமைப்பு வசதியைக் குறிக்கும் வகையில், 2025 ஒக்டோபர் 17 அன்று நீர், மின்சாரம், மற்றும் கழிவுநீர் வெளியேற்ற கட்டமைப்புக்கள் அடங்கலாக, கொழும்பின் பிரதான நகர கட்டமைப்புடன் பொதுப் பயன்பாட்டு இணைப்பு வசதிகளை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளமை குறித்து கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது. முழு அளவிலான வர்த்தகச் செயற்பாடுகளுக்கு ஏற்றதாக இச்செயற்திட்டம் வளர்ச்சி காண்பதில் முக்கியமானதொரு படியாக இச்செயற்பாடு அமைந்ததுடன், பாரிய அளவிலான வணிக நடவடிக்கைகள் மற்றும் கட்டட நிர்மாணம் ஆகியவற்றுக்கு உதவுவதில் தான் தயாராக உள்ளதையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தினுள் அமைந்துள்ள, தெற்காசியாவின் முன்னணி நகர்ப்புற தீர்வையற்ற கடைத்தொகுதியான The Mall, 2024 செப்டெம்பரில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், பிராந்தியத்தில் கொள்வனவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கான முன்னணி அமைவிடம் என்ற கொழும்பின் ஸ்தானத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிகப் பூங்காவாகத் திகழும் கொழும்பு துறைமுக நகரத்தினுள் அமைந்துள்ள The Business Centre, 2024 மார்ச்சில் உத்தியோகபூர்வமாக நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருந்த நிலையில், 2025 மே முடிவு தொடக்கம் அலுவலக இட வசதிகளுக்கான குத்தகைகளை கையளிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. LOLC குழுமத்தின் மூலோபாய முதலீட்டு அங்கமான Browns Investment PLC ன் 120 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன், The Luxury Marina Development ன் நிர்மாணப் பணிகள் 2025 ஜனவரி 10 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. The Marina Development ன் நிர்மாணப் பணிகளை 3 ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், முன்னணி வாழ்க்கைமுறை மற்றும் சில்லறை வர்த்தக சேவைகள் மற்றும் 200 வரையான சிறிய அளவு முதல் நடுத்தர அளவு வரையான படகுக் கப்பல்கள் தரிப்பதற்கான வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
கடலிலிருந்து தலைநிமிர்ந்த நகரத்தின் வலுவான இயக்க ஆற்றல் மற்றும் இலட்சியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறுபட்ட முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்கள் அடங்கலாக, நிலம் சார்ந்த அபிவிருத்தி முதலீடுகளாக 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட தொகையை கொழும்பு துறைமுக நகரம் ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகங்கள் (Businesses of Strategic Importance - BSI) என இலங்கை அமைச்சரவையால் இச்செயற்திட்டத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இந்த செயற்திட்ட அபிவிருத்திகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தினுள் அமையவுள்ள அத்தகைய மூலோபாய முதலீடுகளின் மொத்த எண்ணிக்கையை 27 ஆக உயர்த்தியுள்ளன.
இந்த நிலப்பரப்பில் சர்வதேச வைத்தியசாலை, சர்வதேச பல்கலைக்கழகம், மற்றும் சர்வதேச பாடசாலை ஆகியவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலைமுறைகளைக் கடந்து செல்லும் வாய்ப்பிற்கான முதன்மையான வழிமுறையாக கொழும்பு துறைமுக நகரம் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் இன்னும் பல சாதனை மைல்கற்களை எட்டுவதை CHEC Port City Colombo (Pvt) Ltd ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், வர்த்தகம், பொழுதுபோக்கு, மற்றும் முதலீடுகள் ஆகியவற்றுக்கான பிராந்திய அமைவிடமாக இலங்கையின் வளர்ச்சியை அங்கீகரிப்பதில் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை பிரதான நிர்மாணிப்பு நிறுவனம் வரவேற்கின்றது.
கொழும்பு துறைமுக நகரத்தில் கிடைக்கின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து மேலும் விபரங்களை அறிந்து கொள்வதற்கு www.portcitycolombo.lk இணையத்தளத்தை தயவு செய்து அணுகுங்கள். முதலீட்டு அனுசரணைக்கான தனி வழி மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் குறித்து தகவலுக்கு www.portcitycolombo.gov.lk இணையத்தளத்தை தயவு செய்து அணுகுங்கள்.

