Jan 16, 2026 - 09:13 AM -
0
இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.
இதன்படி, ஸ்பெயின் மற்றும் அதனைச் சார்ந்த பிராந்தியங்களில் இருந்து கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதால், அந்த சந்தைகளை மையமாக வைத்து விளம்பரப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக இந்தியாவில் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அதிக செலவு செய்யும் திறன் கொண்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 94,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் சுட்டிக்காட்டினார்.

