Jan 16, 2026 - 10:02 AM -
0
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற நிலையில், இன்று முற்பகல் 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகின்றது
நேற்று நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் 46% முதல் 50% வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பையில் 41% வாக்குகளும், புனேவில் 36.95% வாக்குகளும் பதிவாகின.
இது 2017 தேர்தலை விட சற்று அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக - ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) - என்சிபி (அஜித் பவார்) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே - சரத் பவார் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடைசியாக 2017ல் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவுக்குப் பிறகு நடைபெறும் முதல் மும்பை மாநகராட்சித் தேர்தல் இது. ஆக்சிஸ் மை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மும்பை மாநகராட்சியில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 131 முதல் 151 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பெறும் என்று கணித்துள்ளன.
உத்தவ்-ராஜ் தாக்கரே கூட்டணி 58-68 இடங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் மட்டும் 23 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மாநகராட்சிப் பள்ளிகள், மைதானங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை, புனே, தானே, நாக்பூர், நாசிக், பிம்ப்ரி-சின்ச்வாட், கல்யாண்-டோம்பிவிலி உள்ளிட்ட 29 முக்கிய நகரங்களின் நிர்வாகம் யார் கையில் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
ஒவ்வொரு வார்டிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் முழுமையாக வெளியாகும்.
ஏறக்குறைய 26 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவசேனா கட்சி உடைந்துள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் உத்தவ் தாக்கரே மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவருக்குமே ஒரு கௌரவ பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.

