Jan 16, 2026 - 11:22 AM -
0
டித்வா சூறாவளியினால் மலையகப் புகையிரதப் பாதைகள் பாரிய அளவில் சேதமடைந்தன. இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரதச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்று வருகின்றன.
இலங்கை புகையிரதத் திணைக்களம் கட்டம் கட்டமாகச் சேவைகளை மீள ஆரம்பித்து வருகின்றது. கடந்த காலங்களில் அம்பேவலை முதல் பதுளை வரையிலும், நாவலபிட்டி முதல் வட்டவளை வரையிலும் புகையிரதச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மலையகப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் புகையிரதத்தையே பயன்படுத்தி வந்தனர். தற்போது கொழும்பு - பதுளை இடையிலான நேரடிப் புகையிரதச் சேவை இல்லாத காரணத்தினால் பின்வருவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிவனொளிபாதமலை யாத்திரிகர் பருவகாலம் ஆரம்பித்துள்ள போதிலும், முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரிய அளவில் குறைந்துள்ளது.
மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையினை ஏற்று, புகையிரதத் திணைக்களம் தற்போது பாதைகளைச் சீர்செய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அம்பேவலை மற்றும் ஹட்டன் பகுதிகளில் அதிகளவிலான ஊழியர்களைப் பயன்படுத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நாவலபிட்டி முதல் வட்டவளை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவையினை கொட்டகலை வரை நீடிப்பதில் எவ்விதத் தடையும் இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வாறு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால், கொட்டகலை மற்றும் ஹட்டன் பகுதிகளிலிருந்து நாவலபிட்டி வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அது பெரும் உதவியாக அமையும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--

