Jan 16, 2026 - 03:05 PM -
0
கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழுவின் அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சியிடம் கிடைத்துள்ளதால், தற்போது பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையின் மிக முக்கியமான குழுவான நிதிக்குழுவின் அதிகாரத்தை, கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த சபை அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கைப்பற்றியது.
மாநகர சபை கட்டளைச் சட்டத்தின்படி, சபையின் அனைத்து நிதி கொடுக்கல் வாங்கல்களும் நிதிக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு பின்னரே மாநகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான நிலையில், நிதிக்குழுவின் பெரும்பான்மை அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சியிடம் கிடைத்துள்ளமையே இந்த சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது.
நிதிக் குழுவின் தலைவராக கொழும்பு மாநகர முதல்வர் விராய் கெலி பல்தசார், பதவியின் நிமித்தம் செயற்படுகின்ற அதேவேளை, ஏனைய 6 உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கடந்த மாதாந்த சபை அமர்வின் போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில், கூட்டு எதிர்க்கட்சியினால் முன்மொழியப்பட்ட ஐந்து உறுப்பினர்களும் தலா 60 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் ரோய் போகஹவத்த, தரங்க ஷானக அத்துரலிய மற்றும் அனுர சுஜீவ வீரவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயா காந்த பெரேரா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அர்ஷாத் நிஷாம்தீன் ஆகியோர் நிதிக் குழுவிற்குத் தெரிவாகியுள்ளனர்.
இந்தக் குழுவின் அதிகாரம் எதிர்க்கட்சியிடம் சென்றுள்ளதால், முதல்வர் விராய் கெலி பல்தசார் எதிர்கால நிதி தீர்மானங்களை எடுப்பதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணங்கிச் செயற்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தற்போதைய நிலையில், நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரிக்கும் போது அதனைத் தடுக்கும் அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ளதால், இது மாநகர சபையின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சவாலாக அமையும் எனக் குறிப்பிடப்படுகிறது.

